Wednesday, 12 September 2012


எடுத்துரைப்பியல் நோக்கில் முல்லைப்பாட்டு

கி.சிவா

ஆய்வாளர்

தமிழ், இந்திய மொழிகள் புலம்

காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம்

காந்திகிராமம் 624 302

            முல்லை நிலத்தின் கார்கால நிலை, ஆயர் வாழ்வு, தலைவனின் பிரிவை ஆற்றியிருக்கின்ற (எண்ணிப் புலம்புகின்ற) தலைவியின் நிலை, முல்லைக்குப் புறம்பாக அமைந்த வஞ்சித்திணையின் வேனிற்பாசறை நிலை, தலைவன் வினை முடித்து மீளுதல் ஆகியவற்றைச் செறிவுடன் காட்டிய நூல், நப்பூதனார் யாத்த முல்லைப்பாட்டாகும். இந்நூல், பத்துப்பாட்டு நூல்களில் மிகக்குறைந்த அடிகளைப் (103) பெற்றுள்ளது. காட்சிகளை மனக்கண் முன் தோன்றும்படி, நப்பூதனார் அமைத்துக்காட்டியுள்ளார். இந்நூலின் அமைப்புநிலை, அழகு, எடுத்துரைப்பு நிலை ஆகியவற்றை விளக்கும் வகையில், முல்லைப்பாட்டின் அமைப்பு, திரைப்படம் போன்ற காட்சியமைப்பு, தொடக்கமும் முதற்பொருளமைப்பும், கருப்பொருளும் உரிப்பொருளும், பின்புலமும் காலமும், கதைமாந்தர்கள், முதன்மைக் கதைமாந்தர்கள், குறிப்பாலுணர்த்துமிடங்கள், தொன்மக்கூறு, அடுக்கிய தொடர்கள், ஒருபொருட்பன்மொழிகள், தொகுத்துச் சொல்லுதல், அணிக்கூறுகள், முரண்களும் ஒப்புமைகளும், படிமம், கூற்றும் சிறப்புக்கூறுகளும் எனும் தலைப்புகளில் இக்கட்டுரை அமைகிறது.

முல்லைப்பாட்டின் அமைப்பு

            இந்நூலின்கண் நிகழ்வுகள் எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளன என்பதையும் அக்கட்டமைப்பு எப்படி எடுத்துரைப்பியலுக்கு உதவுகின்றது என்பதையும் நூலின் அமைப்பினை அறிந்துகொள்வதின் வழியாக உணரமுடியும்.

திருமால் வானளாவி எழுந்து உலகளந்ததைப்போல் முகில் எழுந்து மாலைப்பொழுதில் பெய்த பெருமழை (1-6); இல்லுறை தெய்வத்தைத் தொழுது அகவை நிறைந்த பெருமுதுபெண்டிர் விரிச்சி (நற்சொல்) கேட்டல் (7-11); இளங்கன்றுகளின் வருத்தம் நீக்க ‘உங்கள் தாய்மார் இப்பொழுது வந்துவிடுவர்’ என்று ஆய்மகள் கூறல் (12-17); நல்ல சொற்கள் காதில் விழுந்தமையால், தலைவன் போர்முடித்துத் திறைப் பொருள்களுடன் இல்லம் திரும்புவான் என்று முதுபெண்டிர் கூறினும் தேறாமல், கண்ணீர் சிந்தும் தலைவியின் நிலை (17-23) ஆகியவை முதல் களத்தில் அமைந்துள்ள ஐந்து காட்சிகளாகும்.

காட்டாறுகள் பாயுமிடத்தில் பிடவ மலர்ப்புதர்களை வெட்டி, எதிரியின் வேட்டுவப்படைகளை விரட்டி, முட்களால் மதில் அமைத்துப் பாடிவீடுகள் உருவாக்கப்பட்டமை கூறல் (24-28); இலைதழைகளால் வேயப்பட்ட கூரை முற்றங்களில் காவலுக்கு நின்ற களிறுகள் அவை விரும்பியுண்ணும் கரும்பு, நெற்பயிர், அதிமதுரம் ஆகியவற்றை உண்ணாமல் தும்பிக்கையைத் தந்தங்களின்மீது வைத்து வெறுமனே நிற்கின்றமையும், அவற்றைத் தேற்றுகின்ற பாகர்களையும் காட்டல் (29-36); தவவேடமிட்ட பார்ப்பான் முக்கோலில் தன் காவியுடையை உலர்த்திய தோற்றம்போல அமைக்கப்பட்டுள்ள வீரர்களின் கூடாரங்களைக் கூறல் (37-43); கோயில்போல அமைக்கப்பட்டுள்ள மன்னனின் கூடாரத்திலே பெண்கள் விளக்கேற்றுகின்ற காட்சியைக் கூறல் (43-49); மன்னர்க்குப் பாதுகாப்பாக அகவை முதிர்ந்தவர்கள் உள்ளதைக் கூறல் (50-54); நேரத்தைக் கணித்துச்சொல்வதற்குப் பணியமர்த்தப்பட்ட பொழுதறியுநர் வாழ்த்துதலைக் காட்டல் (55-58); மன்னனின் பள்ளியறையினுள் பாதுகாவலுக்குக் கிரேக்க நாட்டு வலிமை பொருந்திய யவனர்கள் நின்றமையையும், ஊமையர்களாகிய மிலேச்சர்கள் நின்றமையையும் கூறல் (59-66); புண்பட்ட ஆண் யானைகள் வருந்தும் நிலையைக் காட்டல் (67-69); பகைவர்தம் களிறுகளின் தும்பிக்கைகளை வெட்டிப் போரிலே வீரம்காட்டி மாண்டுவிட்ட வீரர்களின் நிலையை எண்ணி வருந்தும் மன்னனின் நிலை (69-72); வேல்கள் குத்திக்கிழித்தமையால் துயர்படும் குதிரைகளை நினைத்து உறக்கமின்றி மன்னன் வாடுதல் (72-76); வெற்றிபெற்ற பின்னர்ப் பாசறையில் இனிய துயில்கொள்ளும்  மன்னனின் நிலை (77-80) ஆகியவை இரண்டாம் களத்தில் அமைந்துள்ள பதினொரு காட்சிகளாகும்.

‘கார் காலத்தில் வருகிறேன்’ என்ற தலைவன் இன்னும் வராத நிலையில், ஏழடுக்கு மாளிகையில் புலம்பியும் நினைந்தும் தேற்றியும் அல்லற்படுகின்ற தலைவியின் நிலை (80-86); மழையருவியின் ஓசையை மீறி அவள் காதில் பேராரவாரம் கேட்ட செய்தி (87-89); கொம்பும் சங்கும் ஊதிப் பெரும்படை ஒன்றுடன் காட்டு நிலத்தின் பெருவழியில், நெடுந்தேர் பூண்ட தலைவன் திரும்பியமை (89-103) ஆகியவை மூன்றாம் களத்தில் அமைந்துள்ள மூன்று காட்சிகளாகும். இவ்வாறு பத்தொன்பது காட்சிகளாக முல்லைப்பாட்டைப் புலவர் நப்பூதனார் அமைத்துள்ளார்.

திரைப்படம் போன்ற காட்சியமைப்பு

            பெருமுதுபெண்டிர் தேற்றியும் தேறாத தலைவியின் கண்களிலிருந்து முத்துப்போல் கண்ணீர்த்துளிகள் விழுந்தன (22-23) என்று கூறிவிட்டுப் புலவர், பாசறைக்காட்சிகளைக் காட்ட தன் பாடலெனும் ஒளிப்படக்கருவியை (Camera) எடுத்துக்கொண்டு போய்விடுகிறார். அதாவது, அழுகின்ற தலைவியின் நிலை என்ன என்பதைச் சொல்லாமல் விட்டுவிட்டார். ஆனால், கன்றுகளைத்தேற்றிய ஆயர்மகளின் சொற்களை உள்வாங்கிக்கொண்டு, ‘தலைவன் வந்துவிடுவான்’ என்ற கருத்தைப் பெருமுதுபெண்டிரின் கூற்றுவழி புலவர் முன்மொழிகிறார். மீண்டும் எண்பதாவது அடியில்தான் தலைவியைக் காட்டுகிறார். இவ்வுத்தியின் வழியாகப் புலவர் இந்நூலைத் திரைப்படம்போன்று அமைத்துள்ள பாங்கினை உணரமுடிகிறது. மேலும், பாடலடிகளின்வழி காட்சியைக் கண்முன் படம்பிடிக்கும் ‘உருக்காட்சி நுட்பம்’ (படிமம்) பொருந்தியுள்ளமையால், முல்லைப்பாட்டை ‘எழிலோவியம்’ எனச் சுட்டுவார், பொ.வே.சோமசுந்தரனார் (முல்லைப்பாட்டு முன்னுரை, கழகம், 2008).

            “முன்னர்த் தலைவியின் நிலைமைகூறி அதனை எஞ்சவிட்டு இடையே தலைவன் நிலையை விரித்தோதி முன்னர் விடப்பட்ட தலைவிநிலை, என்னாயிற்று என ஓதுவோர் அதனை அறிய அவாவும்வண்ணம் விட்ட எச்சத்தைப் பின்னர்த் தொடர்புபடுத்தி, மீண்டும் தலைவி நிலையினை முற்றவோதி அவள் அஞ்செவி நிறைய ஆயின என்னுமாற்றால் எவையாலின என அறிய அவாவும்படி செய்து, மேலும் தலைவன் வருகையைக்கூறி இச்செய்யுளை முடிக்கும் செய்கைத்திறம் மிகவும் இனிதாதல் அறிக” (முல்லை., ப.31)

            ஆகவே, ஓவியம் என்பார்க்கு ஓவியமும் சிற்பம் என்றுணர்வார்க்குச் சிற்பமும் திரைப்படம் என்றெண்ணுவார்க்குத் திரைப்படமும் போல இந்நூல் அமைந்துள்ளது.

தொடக்கமும் முதற்பொருள் அமைப்பும்

            பனுவலின் தொடக்கம் விறுவிறுப்பாய் இருந்தால் மட்டுமே வாசகர்கள் ஈர்க்கப்படுவர். அதன்படி, திருமால்போல எழுந்து பனிக்கடலைப் பருகிய மேகம் மாலைப்பொழுதில் பெருமழை பெய்தது (1-5) என்று வளமையுடன் தொடங்குகிறது முல்லைப்பாட்டு. “கான்யாறு தழீஇய அகனெடும் புறவிற்” (24), “கான நந்திய செந்நிலப் பெருவழி” (97) எனும் அடிகளில் முல்லை நிலத்திற்குரிய நிலமாகிய காடு சுட்டப்பெற்றுள்ளது. மேலும், முல்லைத் திணைக்குரிய பெரும்பொழுதாகிய கார்காலமும் சிறுபொழுதாகிய மாலை நேரமும் சுட்டப்பட்டுள்ளன.

                        “நெய்யுமிழ் சுரையர் நெடுந்திரிக் கொளீஇக்

                        கையமை விளக்க நந்துதொறு மாட்ட”      (48 - 49)

என்ற அடிகளில், பாசறைப் பெண்டிர் பாவை விளக்கு அணையுந்தொறும் தூண்டி எரியூட்டினர் என்பதால் மாலைப் பொழுதெனக் குறிப்பால் உணரமுடிகிறது.

                        “பாவை விளக்கிற் பரூஉச்சுட ரழல”       (85)

எனும் அடி, தலைவியின் அரண்மனையில் பாவை விளக்கு எரிந்துகொண்டிருக்கிறது என்கிறது. எனவே, மாலைப் பொழுதெனப் புலவர் அறியவைக்கிறார். மேலும், மாலைப் பொழுதில்தான் இல்லுறை தெய்வத்தை வழிபடுவர் எனும் கருத்து ‘நெடுநல்வாடை’ (39-44) யின் வழியும் அறியப்படுகிறது. அப்படியே முல்லைப்பாட்டிலும் (7-10) வழிபடுகின்றனர். இதனாலும் மாலைப் பொழுதென அறியலாகின்றது.

கருப்பொருளும் உரிப்பொருளும்

நூலின் தொடக்கத்தில், “நீர்செல நிமிர்ந்த மாஅல் போல” (3) என்று முல்லைநிலக் கடவுளாகிய திருமால்பற்றிக் கூறப்பட்டுள்ளது. ஆயர்கள் முல்லை நிலத்தின் மக்களாகையால் ஆய்மகள் (13), கோவலர் (15) ஆகியோர் காட்டப்பட்டுள்ளனர். பசலைக் கன்றும் (12), அவற்றின் தாய்ப்பசுக்களும் (16) குறிப்பிடப்பட்டுள்ளன. அதிரல் (51), காயா, கொன்றை, கோடல், தோன்றி (93-96) ஆகிய காட்டு மலர்களும் வரகு, வள்ளிக்கிழங்கு ஆகிய உணவுப்பொருட்களும் இரலை, பெண்மான் (93-101) ஆகிய விலங்குகளும் இடம்பெற்றுள்ளன. இவ்வாறு எடுத்துக்கொண்ட திணைக்கேற்பத் தேவையான கருப்பொருட்களைப் புலவர் ஏற்ற இடங்களில் பயன்படுத்தியுள்ளார். கூடுதலாக, யானை, குதிரை போன்ற விலங்குகள் போர்குறித்து வருமிடங்களில் காட்டப்பட்டுள்ளன. இவை முல்லைக்குரிய விலங்குகள் அல்ல. உரிப்பொருளாகிய ஆற்றியிருத்தலும் நூலின்கண் சரியாகப் பொருந்தியுள்ளது.

பின்புலமும் காலமும்

முல்லை நிலமும் கார் காலமும் மாலைப்பொழுதும் அரண்மனையும் காடும் காட்டாறு சூழ்ந்த அரண்களும் ஆயர் இல்லங்களும் இந்நூலின் நிகழ்வுகள் நடைபெறும் பின்புலங்களாகப் (ளியஉந) பயின்று வந்துள்ளன.

            நீர்செல நிமிர்ந்த (3), கடல்பருகி கோடுகொண்டெழுந்த (5), பெயல் பொழிந்த (6), தூஉய்க்கை தொழுது ‘விரிச்சி’ நிற்ப (10-11), புலித்தொடர்விட்ட (62), எழினி வாங்கிய (64) முதலிய தொடர்கள் வந்தமையால் கதை நிகழ்வுகளை இறந்தகாலத்தில் புலவர் அமைத்துள்ளமை அறியமுடிகிறது.

            இன்றுயில் வதியுநன் (80), காடுபிறக் கொழியத் துனைபரி துரக்குஞ் செலவினர் (101-102) போன்ற தொடர்களால் நிகழ்காலத்தையும், இன்னே வருகுவர் தாயர் (16), வினைமுடித்து வருதல் வாய்வது (19-20) முதலிய தொடர்களால் எதிர்காலத்தையும் குறித்துள்ளார். இவ்வாறு மூன்று காலங்களும் இயங்குவெளிகளாக அமையுமாறு இந்நூல் படைக்கப்பட்டுள்ளது.
கதைமாந்தர்கள்

இந்நூலில் நிகழ்வுகள் நடைபெற வழிவகுக்கும் கதைமாந்தர்கள் மூன்று வகைப்பட்டவர்கள். மொத்தக் கதைமாந்தர்கள் :

1.மன்னன், 2. அரசி, 3. பெருமுதுபெண்டிர் (செவிலித்தாய்ஃநற்றாய்), 4. ஆய்மகள், 5. கோவலர், 6. பாகர், 7. பாசறை மகளிர், 8. பெருமூதாளர் (முதிய ஆண்கள்), 9. பொழுதறிந்து சொல்லுபவர், 10. யவனர், 11. மிலேச்சர் (ஊமையர்), 12. தானையர், 13. வேடுவர்.

இவர்களுள் மன்னனும் அரசியும் முதன்மை மாந்தர்களாவர். பெருமுதுபெண்டிர் முதலாக மிலேச்சர் வரை அனைவரும் துணைமைப் பாத்திரங்கள். படையில் உள்ளவர்களும் எதிரியின் வேடுவர்களும் தோன்றாக் கதைமாந்தராய் உள்ளனர். இந்நூலில் எதிர்நிலைக் கதைமாந்தர்கள் எவருமிலர்.

முதன்மைக் கதைமாந்தர்

தலைவன் வினைமுடிந்து வரும்வரை ‘முல்லை சான்ற கற்புடன்’ ஆற்றாமலிருப்பவளாகவும் பின்னர் ஒருவாறு தேற்றிக்கொள்பவளாகவும் தலைவி படைக்கப்பட்டுள்ளாள் (22-23, 80-89).

நூலில் 50 விழுக்காட்டைக் கடக்கும்வரை தலைவனைப் பற்றிய குறிப்பு இல்லை. “எறிநீர் வையகம் வெலீஇய செல்வோய்…” (57) என்ற அடியில்தான் முதன்முதலில், ‘கடல்சூழ்ந்த வையகம் முழுக்க வெல்வதற்காகச் செல்பவனே’ என்று பொழுதறிபவர் விளிக்கிறார். தலைவன் போர் செய்யும் மிகுதியான ஆசையுடன் கண்துஞ்சாதிருக்கின்றான். புண்பட்ட யானை துயரடைவதை எண்ணியும் செஞ்சோற்றுக்கடன் தீர்த்து மாண்ட வீரர்களை எண்ணியும் வேலால் கிழிபட்ட குதிரைகள் வருந்துவதை எண்ணியும் நெடிது கவலைப்படுகிறான் (67-76). மேலும், தலைவியைக் காணவேண்டுமென்ற பேரவாவினால், நெடிய காட்டு வழியிலே வள்ளிக்காடு பின்னடையும்படி, குதிரையை வெகுவிரைவாகச் செலுத்தியவாறு நெடுந்தேரில் வருகிறான் (97-103).

இவ்வாறு கதைத்தலைவனும் கதைத்தலைவியும் வளர்ந்த கதைப்பாத்திரங்களாகப் படைக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பால் உணர்த்துமிடங்கள்

‘நறுவீ முல்லை அரும்பவிழ்ந்தது’ (9-10) என்றதால் மாலை நேரம் என்பது குறிப்பு. ஏற்கனவே சொல்லியதைப்போல இல்லுறை தெய்வத்தை மாலைப்பொழுதில்தான் வழிபடுவர் (10) என்பதும் குறிப்பாகும். பசலைக்கன்று (12-16) என ஒருமையில் சுட்டி, தாயர் என்று பன்மையில் கூறினமையால் கன்றையும் பன்மையாகவே கொள்ள வேண்டும் என்பதும், ஆய்மகளின் கை நடுங்குகிறது (14) என்று கூறியது அகவை மூப்பினாலன்று, பெருமழையின் குளிரால் என்பதும், ‘தேம்படு கவுள சிறுகண் யானை’ (31) எனும் அடியில் மதநீர் வழிந்தது என்பதால் ஆண்யானை என்பதும் குறிப்புகளாகும். யானை கரும்பு, நெல் முதலியவற்றை உண்ணவில்லை (32-33) என்றது உணவு மிகுதியாலன்று, துன்பம் மிகுதியால்தான் என்பது குறிப்பு. முன்பே விளக்கியதைப்போல, பாசறை மகளிர் விளக்கேற்றினர் (49) என்றதால் மாலைக்காலம் என்பது குறிப்பு. பிடிக்கணம் மறந்த வேழம் (69) என்றது புண்பட்ட களிற்றியானையின் உடல்வருத்த மிகுதியைக்காட்டும் குறிப்பேதுவாகும் (முல்லை., ப.27) என்கிறார், பொ.வே. சோமசுந்தரனார். இங்குக்; களிறு என்பதைக் குறிப்பால்தான் உணரமுடிகிறது. பாசறையில் மன்னன் இனிய துயில்கொண்டான் (80) என்றதனால், பகைவரை வெற்றிகொண்டான் என்பதும், பெருந்தானையுடன் திரும்பினான் (90) என்றதால் அவன் படைகளுக்கு அழிவில்லை என்பதும், கலைமான்களுடன் பெண்மான்கள் துள்ளும் காடு (99) என்றதனால் தலைவனும் தலைவியும் சேர்வர் என்பதும் குறிப்புகளாகும். மேலும், பசலைக்கன்றைப்போலவே பாசறையிலுள்ள யானை, குதிரை ஆகியவையும் ஒருமையிலேயே சுட்டப்பட்டுள்ளன. ஆனால் அவற்றைப் பன்மையாகக்கொள்ளவேண்டும் என்பது குறிப்பு. இவ்வாறு பதின்மூன்று இடங்களில் குறிப்புப்பொருள் வருமாறு முல்லைப்பாட்டை நப்பூதனார் அமைத்துள்ளார்.

தொன்மக்கூறு

உண்மையென மெய்ப்பித்துக்காட்டவியலாத கூறுகளைத் ‘தொன்மம்’ என்று குறிப்பிடுவர். அவ்வகையில்,

“நனந்தலை யுலகம் வளைஇ நேமியொடு

வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை

நீர்செல நிமிர்ந்த மாஅல் போல” (1-3)

இவ்வடிகள், திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றான வாமன அவதாரத்தைக் குறிப்பிடுகின்றன. கேரளத்தில் ‘மாவலி’ மன்னன் வாமனனின் கைகளில் நீரூற்றியவுடன் சங்கும் சக்கரமும் பெரிய கையும்கொண்ட திருமால் மூன்றடியால் உலகளந்தான் என்பர். இங்கே திருமாலுக்கு நாமமிருப்பதாகச் சுட்டப்படவில்லை. ஆகவே நாமமிடும் பழக்கம் பிந்தையதாயிருக்கலாம். இவ்வாறு இத்தொன்மம் இந்நூலில் பயின்றுவந்துள்ளது.

அடுக்கிய தொடர்கள்

            கூறவந்த கருத்தை வலுவாகச் சொல்வதற்காகவும் அழகியல் நயத்திற்காகவும் ஒரே சொல்லை அல்லது ஒரே பொருள் தருவனவற்றை அடுக்கிச் சொல்வதும் எடுத்துரைப்பு முறையாகும். அவ்வகையில்,

1.நன்னர் நன்மொழி (17), 2. நல்ல நல்லோர் (18), 3. காட்டவுங் காட்டவுங் காணாள் (22), 4. அரணம் அரணமாக (42), 5. அசைவளிக்கு அசைவந்தாங்கு (52)

எனுமைந்தும் அடுக்கிவந்து கற்பாரை ஈர்க்கின்றன.

ஒருபொருட் பன்மொழிகள்

            கடல் - பாடிமிழ் பனிக்கடல் (4), படுநீர்ப்புணரி (28), எறிநீர் (57)

            காடு - கான், புறவு (24), கானம் (97)

            மழை - நீர் (3), எழிலி (5), பெயல் (6), அருவி(87), வெண்மழை (100)

பெரிய - தடக்கை (2), பெரும்பெயல் (6), பரூஉக்கை (70), பரூஉச்சுடர் (85)

யானை - சிறுகண்யானை (31), பிடி, வேழம் (69)

பாவை விளக்கு - கையமை விளக்கம் (49), பாவை விளக்கு (85)

அம்பு - பகழி (73), ஏ (84)

விரிச்சி - விரிச்சி (11), நன்மொழி (17), வாய்ப்புள் (18)

எதிரி - தெவ்வர் (18), பகைவர் (77)

ஞாலம் - உலகம் (11), வையகம் (57)

ஆகியவை ஒரு பொருளைக்குறிக்கக் கையாளப்பட்ட பல சொற்களாகும்.

தொகுத்துச்சொல்லல்

            மாந்தர்களின் பண்புகளையோ, மலர்களையோ, கருவிகளையோ இன்ன பிறவற்றையோ தேவைக்கேற்பத் தொகுத்துச் சொல்லுதல் புலவர்களின் மரபான எடுத்துரைப்பியலாகும்.

1.         தன் மண்ணைக் காக்கப் படையெடுத்துச்சென்று பாடிவீட்டை அமைத்த முறை, யானையின் உணவு உண்ணாத நிலை, வீரர்களின் இருப்பிடம், அரசனின் இருப்பிடம், பாசறைப் பெண்கள் விளக்கைத்தூண்டி எரியவைக்கும் காட்சி, பாதுகாவலுக்கு நிற்கும் அறிவுடைய பெரியவர்கள், பொழுதறிந்து சொல்பவர், மன்னனைக் காக்கும் திடமான உடலுடைய யவனர்கள், வாய்பேசா ஊமையர், புண் நினைந்து வருந்தும் களிறுகள், செஞ்சோற்றுக்கடன் முடித்த வீரர்கள், புண்பட்டுத் துயரடையும் குதிரைகள், இவற்றை எண்ணி உறங்காத மன்னனின் நிலை, வெற்றிக்குப்பின்னர் உறங்கும் மன்னன் நிலை ஆகியவற்றைத் தொகுத்துச் சொல்வதன் வாயிலாக ஒன்றைப்பற்றி முழுமையாக அறியமுடிகிறது. எதையும் தவிர்த்துவிடாமலும், தேவையற்ற எதையும் சேர்த்துவிடாமலும் செப்பமாகச்செய்யும் செய்நேர்த்தி முறையை நப்பூதனார் பின்பற்றியுள்ளார்.

2.         தலைவனைப்பிரிந்த தலைவியின் நிலையைத் தொகுத்துக் காண்பதால் அவளுடைய ஆற்றாமையின் அளவை முழுதுணரலாம். பெற்றோரைப் பிரிந்த குழந்தையைத் தேற்றுவது கடினம். அப்படியே போர்மேற்சென்ற தலைவன் என்ன ஆனானோ?, சொல்லிச்சென்ற காலம் வந்தபின்னரும் இன்னும் அவன் வரவில்லையே என்று புலம்பும் தலைவியையும் தேற்றுவது கடினம்.

“… … … காணாள் துயருழந்து

நெஞ்சாற்றுப் படுத்த நிறைதபு புலம்பொடு

நீடுநினைந்து தேற்றியும் ஓடுவளை திருத்தியும்

மையல் கொண்டு மொய்யென வுயிர்த்தும்

ஏவுறு மஞ்ஞையி னடுங்கி யிழைநெகிழ்ந்து

பாவை விளக்கிற் பரூஉச்சுட ரழல

இடஞ்சிறந் துயரிய எழுநிலை மாடத்து

முடங்கிறைச் சொரிதரு மாத்திர ளருவி

இன்ப லிமிழிசை யோர்ப்பனள் கிடந்தோள்” (80-88)

எனும் அடிகளில் அவளுடைய துயரம் காட்சியாக்கப்பட்டுள்ளது. அவள் தலைவனைக் காணாது துயரடைந்தாள்; நெஞ்சையாற்றுப்படுத்த முடியாமல் நிறைகெட்டழியும்படி (பண்புகள்) புலம்பினாள்; அவன் பிரிந்தமைக்கான ஏதுக்களை நீடுநினைந்து ஆராய்ச்சி செய்து, ‘மக்களைக் காப்பாற்றுதல் மன்னன் கடமையே!’ என்று தன்னைத்தானே தேற்றிக்கொண்டாள்; அவனைக் காணாது உடல்மெலிந்ததால் வளையல் கழன்றது; அதை மேலேற்றித் திருத்தினாள்; மீண்டும் வருத்தமுற்று மனமயக்கமடைந்து ‘ஒய்’யெனப் பெருமூச்சுவிட்டாள்; அம்புபட்ட மயில்போலத் துடிதுடித்தாள்; அவளுடைய அணிகலன்களும் ஆடைகளும் நெகிழ்ந்தன; ஏழடுக்கு மாளிகையில் பொன் பொருள் நிறைந்திருப்பினும் மழை பெய்துகொண்டிருப்பினும் எதையும் கண்கொண்டு நோக்காது தலைவனையே நினைந்துகொண்டிருக்கிறாள். இவ்வாறு தலைவியின் நிலையைத் தொகுத்துச் சொல்லியுள்ளார் புலவர்.

இப்பாடல் அடிகள் கம்பருக்குச் சீதையின் துயரைக்காட்ட உதவியிருக்கலாம். இராமனைப்பிரிந்த சீதை, ‘மண்ணில் விழுகிறாள்; விம்முகிறாள்; அவள் உடல் மிகுந்த வெப்பமடைகிறது; அஞ்சுகிறாள்; மண்ணிலிருந்து எழுகிறாள்; மீண்டும் தலைவனைக் காணமுடியுமோ என்று ஏங்கினாள்; மீண்டும் வருந்துகிறாள்; இராமனை எண்ணி வணங்குகிறாள்; சோர்ந்து போகிறாள்; உடல் நடுங்குகிறாள்; துயருற்றுப் பெருமூச்சுவிடுகிறாள்; அழுகிறாள். இவற்றைத்தவிர வேறொன்றும் அறியாதவளாய் உள்ளாள்’ என்கிறார் கம்பர்.

“விழுதல் விம்முதல் மெய்யுற வெதும்புதல் வெருவல்

எழுதல் ஏங்குதல் இரங்குதல் இராமனை எண்ணித்

தொழுதல் சோருதல் துளங்குதல் துயர்உழந்து உயிர்த்தல்

அழுதல் அன்றி மற்றுஅயல் ஒன்றும் செய்குவது அறியாள்” 

(கம்ப. சுந்தர. காட்சிப்படலம், பா.5073)

மேலும், தலைவன் வருவான் வருவான் என்ற நம்பிக்கையில் சீதை எல்லாத் திசைகளையும் கண்களால் அளக்கிறாள் (5077) என்றும் பிறவாறும் கம்பர், தலைவியின் நிலையைப் படம்பிடித்துள்ளார்.

            தொடர்ந்து, காயா (காசாமரம்) மலர்கள் மைபோன்று மலர்ந்தன; கொன்றை மலர்கள் தங்கத்தைப்போலச் சொரிந்தன; வெண்காந்தள் (கோடல்) மலர்கள் உள்ளங்கைபோன்று அவிழ்ந்தன; செங்காந்தள் (தோன்றி) மலர்கள் குருதியைப்போன்று பூத்தன (93-96) என்று காட்டு மலர்களைப் புலவர் நப்பூதனார் பட்டியலிட்டுள்ளார்.

அணிக்கூறுகள்

            உவமைகளும் முரண்களும் கற்கின்றவர்களை ஈர்த்துத் தன்வயப்படுத்தத் தக்கன. இவையில்லாத பண்டைய இலக்கியங்கள் ஒன்றுகூட இல்லை.

1,2. “… … … மாஅல் போலப்

 பாடிமிழ் பனிக்கடல் பருகி வலனேர்பு                       - இயற்கை

 கோடுகொண் டெழுந்த கொடுஞ்செல வெழிலி” (3-5)

  மால் போன்ற மழை; பனிபோன்ற குளிர்ந்த கடல்.

 3. “யாழிசை யினவண் டார்ப்ப…”   (8)                      - இயற்கை

                        யாழிசையைப்போல ஓரின வண்டுகள் ஆர்த்தன.

               4,5. “பூப்போ லுண்கண் புலம்புமுத் துறைப்ப” (23) - தலைவி

                        பூவைப்போன்ற உயிருண்ணும் கண்; முத்துப்போன்ற கண்ணீர்.

                6. “படுநீர்ப் புணரியிற் பரந்த பாடி”   (28)               - பாசறை

                        கடல்போன்று பரந்த பாடிவீடு.

    7.  “தயினுனை மருப்பிற்றங்…”      (34)                 - பாசறை

                        வேலினை(அயில்)ப் போன்ற கூர்மையான தந்தங்களையுடைய யானை.

                8. “முக்கோ லசைநிலை கடுப்ப…”   (38)                - பாசறை

முக்கோலிலே காவித்துணி உலர்த்தப்பட்டதை ஒப்ப வல்வில்மீது அம்பறாத்தூணி தொங்கவிடப்பட்டுள்ளது.

                9. “இரவுபகற் செய்யுந் திண்பிடி யொள்வாள்” (46)           - பாசறை

                        இரவைப் பகல்போல மாற்றும் வலிய பிடியமைந்த ஒளிவீசும் வாள்.

                10. “அதிரல் பூத்த ஆடுகொடிப் படாஅர்

                          சிதர்வர லசைவளிக் கசைவந் தாங்குத்

                          துகின்முடித்துப் போத்த தூங்க லோங்குநடைப்

                          பெருமூ தாள ரேமஞ் சூழப்”              (51-54)                        - பாசறை

மோசி மல்லிகை பூத்த கொடிகள் மழைத்துளியுடன் காற்றிற்கு அசைவதைப்போலத் துகில்முடித்துப் போர்த்திய ஓங்குநடைப் பெருமூதாளர்கள் அசைந்தனர்.

    11. “பாம்புபதைப் பன்ன பரூஉக்கை துமிய…”  (70)          - பாசறை

யானையின் தும்பிக்கையை வெட்டியதும் அது அடிபட்ட பாம்பு பதைப்பதைப்போலப் பதைத்தது.

    12. “ஏவுரு மஞ்ஞையின் நடுங்கி ...”     (84)                        - தலைவி

            அம்புபட்ட மயில்போலத் தலைவி துன்புற்றாள்.

    13. “… … காயா அஞ்சன மலர”    (93)                   - இயற்கை

            காயா மலர்கள் மைபோன்று மலர்ந்தன.

    14. “… … கொன்றை நன்பொன் கால”   (94)         - இயற்கை

            கொன்றை மலர்கள் பொன்போல் சொரிந்தன.

    15. “கோடல் குவிமுகை யங்கை யவிழ”   (95)        - இயற்கை

            வெண்காந்தள் மலர்கள் உள்ளங்கையைப்போல விரிந்தன.

    16. “… தோன்றி குருதி பூப்ப”     (96)                      - இயற்கை

            செங்காந்தள் மலர்கள் குருதியைப்போலப் பூத்தன.

இந்நூலிலுள்ள 103 அடிகளில் பதினாறு உவமைகள் பயின்றுவந்துள்ளன. இவற்றுள், தலைவியைக் குறித்துவந்தன மூன்று; பாசறையைக் குறித்துவந்தன ஆறு; இயற்கையைக் குறித்துவந்தன ஏழாகும். இவற்றுள், ஏழு உவமைகளில் உவமஉருபுகள் வெளிப்படையாக வந்துள்ளன (1,4,6,8,10,11,12). ஏனைய ஒன்பதும் (2,3,5,7,9,13,14,15,16) வெளிப்டையான உவமஉருபு அற்றவை. ‘இன்’ எனும் உவமஉருபு இரண்டு இடங்களில் (6,12) பயின்று வந்துள்ளது. இவ்வுருபு தொல்காப்பியர் கூறிய 36 உவமஉருபுகளுள் அடங்காது, புதியதாய் வந்துள்ளது. சங்குப்புலவர் முல்லைப்பாட்டில் பத்து உவமைகள் வந்துள்ளதாகக் கூறியுள்ளார் (பத்துப்பாட்டு ஆய்வுகள், ப. 207). முனைவர் ச.மகாவிஷ்ணு பதினோர் உவமைகள் வந்துள்ளதாகக் கூறியுள்ளார் (பத்துப்பாட்டு ஆய்வுத்துணர், ப. 80). ஆனால், பதினாறு உவமைகள் உள்ளன.

முரண்களும் ஒப்புமைகளும்

1)         1. பெரும்பெயல் × சிறுபுன்மாலை (6), 2. பெருமுதுபெண்டிர் × சிறுதாம்பு (11-12), 3. இரவு × பகற்செய்யும் (46), 4. நந்து × மாட்ட (49), 5. உடம்பினுரைக்கும் × உரையா நா (65), 6. கண்படை பெறாஅது (67) × இன்றுயில் வதியுநன் (80), 7. தேம்பாய் கண்ணி, நகைதாழ் கண்ணி திருத்துதல் (71,78) × ஓடுவளை திருத்துதல் (82), 8. கோடல் × தோன்றி (95-96), 9. குவிமுகை × அங்கையவிழ (95), 10. இரலைமான் × மடமான் (99), 11. தலைவனையே நினைத்துக் கொண்டிருக்கும் தலைவி × தலைவியையே நினைக்காத தலைவன்.

2)         1. பாசறையில் பிடிக்கணம் மறந்த வேழம் = பாசறையில் தலைவியை மறந்த தலைவன், 2. உணவு உண்ணாத யானைகள் =  உண்ணாது உயங்கும் குதிரைகள்

இவ்வாறு பதினொரு முரண்களையும் இரண்டு ஒப்புமைகளையும் நப்பூதனார் இந்நூலின்கண் அமைத்துள்ளார்.

 படிமம்

            செறிவுடன் சொல்லப்படும் உவமைகளாலும் நிகழ்வுகளைத் தொகுத்துச்சொல்வதாலும் ஒன்றின் உரு நம் மனக்கண்முன் தோன்றும். அவ்வுருக்காட்சியே படிமம் எனப்படும்.

இந்நூலில், அமைக்கப்பட்டுள்ள எல்லாக்காட்சிகளுமே புலவர்தம் விளக்கும் திறனால், தொகுத்துச்சுட்டும் முறைமையால், தக்க உவமைகளைக் காட்டிய திறத்தால் படிமம்போலப் படைக்கப்பட்டுள்ளன.

1.         “உவலைக் கூரை யொழுகிய தெருவிற்

கவலை முற்றங் காவ னின்ற

தேம்படு கவுள சிறுகண் யானை

ஓங்குநிலைக் கரும்பொடு கதிர்மிடைந் தியாத்த

வயல்விளை யின்குள குண்ணாது நுதல்துடைத்

தயினுனை மருப்பிற்றங் கையிடைக் கொண்டெனக்”   (29-34)

இலைதழைகளால் வேயப்பட்ட கூரைகள் அமைந்துள்ள தெருவில், பிரிந்த வழியுடைய முற்றங்களில் காவலுக்கு நிற்கின்ற யானையின் கன்னங்களில் மதநீர் வழிகின்றது. அந்த யானை தான் விரும்பியுண்ணும், ஓங்கி வளர்ந்த கரும்புடன் நெற்கதிர்களையும் வயலிலே விளைந்த குளகு என்னும் அதிமதுரத்தையும் ஒன்றாகக் கட்டப்பட்ட கட்டினை உண்ணாமல், வேலின் நுனிபோன்ற தந்தங்களில் தம் தும்பிக்கையை வைத்துக்கொண்டு நின்றன. இக்காட்சிகள் ஓர் ஓவியத்தை நம் மனக்கண்முன் கொண்டுவந்து நிறுத்துகின்றன.

2.         “குறுந்தொடி முன்கைக் கூந்தலஞ் சிறுபுறத்து

இரவுபகற் செய்யுந் திண்பிடி யொள்வாள்

விரவுவரிக் கச்சிற் பூண்ட மங்கையர்

நெய்யுமிழ் சுரையர் நெடுந்திரிக் கொளீஇக்

கையமை விளக்க நந்துதொறு மாட்ட”            (45-49)

சிறிய வளையலை அணிந்துள்ள முன்கையையும் கூந்தலசைகின்ற அழகினையும் சிறிய முதுகினையும் உடைய பெண்கள், இரவைப் பகலாக்குமளவிற்கு ஒளிவீசுகின்ற, வலிமையான பிடியுடைய வாளினைத் தம் மார்புக் கச்சுடன் சேர்த்து அணிந்துள்ளனர். கையில் எண்ணெய் உள்ள பாத்திரத்தையும் கரண்டியையும் திரியையும்கொண்டு கையமைந்துள்ள விளக்கு (பாவை விளக்கு) அணையுந்தொறும் எரியூட்டுகின்றனர். இக்காட்சியில் படிமம் ஆவதற்குரிய ஏதுக்கள் சில. அவை: பெண் கை, அதிலுள்ள வளையல், அசையும் அழகிய கூந்தல், சிறிய முதுகு, மார்புக் கச்சுடன் பொருத்தப்பட்டுள்ள வாள்; ஒளிபொருந்திய வாள், திண்மையான கைப்பிடியையுடையது, இரவைப் பகலாக்கும் தன்மையது; பெண்ணின் கையிலே கரண்டியுடன்கூடிய எண்ணெய்ப் பாத்திரம், நெடிய திரி; தங்கப் பெண் பதுமையின் கையிலுள்ள விளக்கு, அது காற்றுக்கு அணையுந்தொறும் எரியூட்டுவது ஆகிய தெளிந்த விளக்கங்கள் ஒரு சித்திரக் காட்சியை நமக்குக் காட்டுகின்றன.

3.         “ஏவுறு மஞ்ஞையி னடுங்கி …”                   (84)

மன்னனை நினைத்து வாடிய அரசியின் நிலை நான்கே வார்த்தைகளில் படமாக்கப்ட்டுள்ளது. ஏ - அம்பு; உறு - பாய்ந்த; மஞ்ஞை - மயில்; இன் - போல; நடுங்கி - நடுங்கித் துயருற்றாள். இதைவிட, தலைவியின் துயரத்தைச் சரியாச் சொல்லிவிட முடியாது.

            இப்படிப் பல காட்சிகளைக் கண்முன் நிற்கும் வகையில் நப்பூதனார் படைத்துக்காட்டியுள்ளார். இவ்வாறு காட்சிப்படுத்தும் எடுத்துரைப்பியலைப் படைத்துக் காட்டுவதில் பண்டைய புலவர்கள் வல்லவர்கள்.

கூற்றும் சிறப்புக்கூறுகளும்

            ‘கொடுங்கோல் கோவலர் பின்னின்று உய்த்தர’ என்னும் அடியிலிருந்து ‘பருவரல் எவ்வம்களை மாயோய் என’ (15-21) என்னும் அடிவரை பெருமுதுபெண்டிர் கூற்றிலும் பிற யாவும் (1-14, 22-103) ஆசிரியர் கூற்றிலும் அமைந்துள்ளன.

            இந்நூலில் தலைவனும் தலைவியும் சந்தித்தார்களா என்பதற்கான விடையைப் புலவர் நத்தத்தனார் வாசகர்களிடமே விட்டுவிட்டார். மழையின் ஓசையும் பெரும்படை, நெடுந்தேரின் ஓசைகளும் தலைவியின் அகம், செவியில் கேட்டன என்று சொல்லி நிறுத்திவிட்டமையால் இருவரும் சந்திக்கவேயில்லை என்பதே உண்மை. மேலும், கதை நிகழ்வுகளுக்கு அடிப்படையாக அமைந்த தலைவனும் தலைவியும் கூற்று நிகழ்த்தவேயில்லை (பத்துப்பாட்டு ஆய்வுத்துணர், ப. 78). உரிப்பொருளாகிய ஆற்றியிருத்தல் என்னும் இலக்கியமரபை மீறிய அளவிற்குச் சிலவிடங்களில் தலைவியின் நிலையைப் புலவர் காட்டியுள்ளார். இவை இந்நூலின் சிறப்பு உத்திகளாகும். மொத்தத்தில் நூலின் கதை நிகழ்வுகள் அனைத்தையும் புலவர் நேரடி வருணனையில் ஒளிபரப்புச் செய்வதைப்போல (Live Telecast) அமைத்துள்ளார்.
முடிவுரை

1.         பத்துப்பாட்டு நூல்களில் மிகக் குறைந்த அளவு 103 அடிகளைக் கொண்டது முல்லைப்பாட்டு. இந்நூலை, முதற்பகுதியில் ஐந்து காட்சிகள், இரண்டாம் பகுதியில் பதினொரு காட்சிகள், மூன்றாம் பகுதியில் மூன்று காட்சிகளுமாக மொத்தம் பத்தொன்பது காட்சிகளில் ஆசிரியர் நப்பூதனார் அமைத்துள்ளார்.

2.         முதற்பகுதியில் தலைவி பிரிவாற்றாது அழுதலைக் காட்டி நிறுத்திவிட்டு, பாசறைக் காட்சிகளைக் காட்டுவதும் அவற்றை அப்படியே விட்டுவிட்டு, மீண்டும் தலைவியின் அரண்மனை நிலையைக் காட்டுவதும் திரைப்படம்போல இந்நூல் அமைக்கப் பட்டுள்ளதை அறியமுடிகிறது. இந்நூல் ஓவியம் என்பார்க்கு ஓவியம்போலவும் சிற்பம் என்பார்க்குச் சிற்பம்போலவும்; திரைப்படம் என்பார்க்குத் திரைப்படம்போலவும் அமைந்து முப்பரிமாணப் பெட்டகமாய்க் கற்பவர்க்கு விருந்தளிக்கிறது.

3.         பனுவலின் தொடக்கத்திலேயே மழை பொழியும் காட்சி காட்டப்பட்டுள்ளதால் நூல் விறுவிறுப்புடன் செல்கிறது. முல்லை நிலத்திற்குரிய காடும் பெரும்பொழுதாகிய கார்காலமும் சிறுபொழுதாகிய மாலைக்காலமும் உரிப்பொருளாகிய ஆற்றியிருத்தலும் நூலின்கண் சரியாகப் பொருந்தி வருகின்றன.
4.         முல்லைக்குரிய கடவுளாகிய திருமால் பற்றியும், மக்களாகிய ஆய்மகள், கோவலர் ஆகியோரைப் பற்றியும் விலங்குகளில் பசலைக்கன்று, தாய்ப்பசுக்கள், ஆண்மான், பெண்மான் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், அதிரல், காயா, கொன்றை, கோடல், தோன்றி ஆகிய காட்டு மலர்களும் வரகு, வள்ளிக்கிழங்கு ஆகிய உணவுப்பொருள்களும் திணைக்கேற்பவும் தேவைக்கேற்பவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. கூடுதலாக, யானை, குதிரை போன்ற விலங்குகள் போர்குறித்து வருமிடங்களில் காட்டப்பட்டுள்ளன. இவை முல்லைக்குரிய விலங்குகள் அல்ல.

5.         முல்லை நிலத்துக் கார்காலமும் மாலைப்பொழுதும் அரண்மனையும் காடும் காட்டரண்களும் ஆயர் இல்லங்களும் நூலின் இயங்கு வெளியாக உள்ளன. மூன்று காலங்களிலும் நிகழ்வுகள் நடந்தனவாகக் காட்டப்பட்டுள்ளன.

6.         பதின்மூன்று பேர் கதைமாந்தர்களாய் உள்ளனர். அவர்களுள் கதைத்தலைவனும் தலைவியும் முதன்மையானவர்கள். பெருமுதுபெண்டிர் முதலாக மிலேச்சர் ஈறாகவுள்ள ஒன்பதுபேர் துணைமையானவர்கள். படையிலுள்ளவர்களும் எதிரிமன்னனின் வேட்டுவப் படையினரும் தோன்றாக் கதைமாந்தராவர். முதன்மைக் கதைமாந்தரைத்தவிர, ஏனையோர் வளரா நிலையினர்.

7.         இந்நூலில், பதின்மூன்று இடங்களில் குறிப்பாகப் பொருளுணருமாறு புலவர் படைத்துக் காட்டியுள்ளார்.

8.         திருமாலின் வாமன அவதாரம் பற்றிய செய்தி தொன்மக் கூறாய் அமைந்து, தொடக்கம் நன்கு அமைய உதவியுள்ளது.

9.         இலக்கியச்சுவை மிகுவதற்காக, இந்நூலில் ஐந்து அடுக்கிய தொடர்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன.

10.       பத்துச் சொற்களுக்கு ஒருபொருட்பன்மொழிகள் பயன்படுத்தப் பட்டுள்ளன.

11.       பாசறைக் காட்சிகளும் தலைவியின் ஆற்றாத நிலையும் நான்கு மலர்களும் தொகுத்துச் சொல்லும் எடுத்துரைப்பாக அமைந்துள்ளன. நப்பூதனார் தலைவியின் நிலையைக் காட்டியவிதம், கம்பருக்குச் சீதையைக் காட்டப் பயன்பட்டுள்ளது.

12.       இந்நூலில் பத்து உவமைகள் உள்ளன என்கிறார் சங்குப்புலவர். பதினோர் உவமைகள் உள்ளன என்கிறார் ச.மகாவிஷ்ணு. ஆனால், பதினாறு உவமைகள் பயின்று வந்துள்ளன. அவற்றுள் தலைவியைப் பற்றியன மூன்று; பாசறை பற்றியன ஆறு; இயற்கை பற்றியன ஏழு. இவற்றுள் ஏழு உவமைகளில் உவமஉருபுகள் வெளிப்படையாகவும் ஒன்பது உவமைகளில் மறைந்தும் வந்துள்ளன. தொல்காப்பியர் சுட்டாத உவமஉருபாகிய ‘இன்’ இரண்டு இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

13.       பதினோரிடங்களில் முரண்களும் இரண்டிடங்களில் ஒப்புமைகளும் பயன்படுத்தப் பட்டுள்ளன.

14.       ஏறக்குறைய நூலின் அனைத்துக் காட்சிகளும் உருக்காட்சிகளாகப் படைக்கப் பட்டுள்ளன. அவற்றுள் மூன்று படிமங்கள் விளக்கப்பட்டுள்ளன.

15.       பெருமுதுபெண்டிர் கூற்று ஓரிடத்திலும் (15-21) ஏனையவை (1-14, 22-103) எல்லாம் ஆசிரியர் கூற்றிலும் அமைந்துள்ளன.

16.       நூலின் முடிவு என்ன என்பதை வாசகர்களிடமே நப்பூதனார் ஒப்படைத்துள்ளமையும் தலைவனும் தலைவியும் சந்திக்கவேயில்லை என்பதும் அவர்கள் கூற்று நிகழ்த்தவேயில்லை என்பதும் இந்நூலின் தனிச்சிறப்புகளாகும். மொத்த நூலும் நேரடி வருணனையில் ஒளிபரப்புச் (LIVE TELECAST) செய்ததைப்போல அமைக்கப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் எதுகை, மோனை, இயைபு போன்றவை சேர்க்கப்படவில்லை. இந்தளவில் தம் எடுத்துரை நுட்பங்களை நூலாசிரியர் பயன்படுத்தியுள்ளார்.

இவை இக்கட்டுரையின்வழி பெறப்பட்ட செய்திகளாகும்.

துணைநூற்பட்டியல்

1.         கரிகாலன், நைசி., (தொ.ஆ.)              -  பத்துப்பாட்டு ஆய்வுகள்

                                                                         நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

                                                                        சென்னை 98

                                                                        மு.ப. திசம்பர், 2011

2.         சற்குணம், மா. முனைவர்.,(தொ.ஆ.)  -  சங்க இலக்கியம் பத்துப்பாட்டு-

ஆய்வுத்துணர்                                                   

தமிழாலயம்

                                                                  விழுப்புரம் 1

                                                                    மு.ப. ஏப்பிரல் 2011

3.         சோமசுந்தரனார், பொ. வே.,              -  பத்துப்பாட்டு மூலமும் உரையும் தொகுதி 1,2                                                                         கழக வெளியீடு,

                                                                            சென்னை,

                                                                             ப.ஆண்டு 2007

 

  

No comments:

Post a Comment